வணக்கம்,
இதை பற்றிய அறிவியல் ரீதியான விளக்கத்தை தெரிவிக்கும் முன்னர், ஆதாரமற்ற முட்டாள்தனமான பார்வார்டுகளை யாரும் இன்னொருவருக்கு அனுப்பி சிலபல குழந்தைகளை முடமாக்கிய பாவத்தை சேர்த்துக்கொள்ளாதீர்கள் என்று கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
இது போன்ற மெசேஜ் அனுப்புபவர்கள், தீவிரவாதிகளை விடவும் மிக பயங்கரமானவர்கள். பொடா, தடா என்று ஏதாவது சட்டத்தில் கைது செய்து இவர்களை உள்ளே தள்ள வேண்டும்.
தட்டம்மை(measles) என்பது என்ன?
குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் உடலில் தடுப்புடன் வரும் அம்மை வகைகளில் ஒன்று.
இது அம்மை தானே. நாங்கள் வேப்பிலை அடித்துக்கொள்கிறோம். இதற்கு எதுக்கு தடுப்பூசி?
மற்ற அம்மைகள் போலில்லாமல், நிமோனியா எனப்படும் தீவிர நெஞ்சு சளி, ஜுரம், தீவிர வயிற்றுப்போக்கு, கடும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, போன்ற கடும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் இந்த தட்டம்மை.
1990 இல், ஒரு வருடத்திற்கு ஆறு இலட்சம் குழந்தைகள் தட்டம்மை நோயால் இறந்து போனதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
2015 இல், உலகில் ஒரு வருடத்தில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் குழந்தைகள் தட்டம்மை நோய்க்கு பலியாகின.
http://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(12)60522-4/abstract
மற்ற நாடுகளின் நிலைமை என்ன?
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் தட்டம்மை 1990களில் வருடத்திற்கு 30000 பாதிப்புகளாக இருந்தது, இப்போது வருடத்திற்கு 150 முதல் 200 பாதிப்புகள் என்ற நிலையில் மட்டுமே உள்ளது. இந்த 200 புது நோயாளிகளுக்கும் காரணம் இது போன்ற தடுப்பூசி பற்றிய தவறான புரிதல்களும் பெற்றோர்கள் தடுப்பூசி போடாமல் விடுவதும் தான்.
இந்தியாவில் இதன் நிலைமை என்ன?
உலகில் 2015இல் தட்டம்மையினால் ஏற்பட்ட குழந்தைகள் இறப்புகளில், இந்தியாவில் மட்டும் எழுபதாயிரம் குழந்தைகள் தட்டம்மை நோய்க்கு பலியாகின. அதாவது உலக இறப்புகளில் 50 சதவீதம்.
இந்தியாவில் ஒரு வருடத்தில் எய்ட்ஸ் நோயால் இறக்கும் குழந்தைகளை விட தட்டம்மை நோயால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்.தடுப்பூசியால் தடுக்கக்கூடிய இறப்புகளில் தட்டம்மை முதல் இடத்தில் உள்ளது.
http://dx.doi.org/10.3402/iee.v5.27784
எப்போது இருந்து இந்த measles தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டு வருகிறது?
1985 ஆம் ஆண்டு முதல் இந்த measles(தட்டம்மை) தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளாக இதுவரை எந்த பிரச்னையும் இதனால் வந்ததில்லை.
இப்போது என்ன மாற்றம்? MR தடுப்பூசி என்றால் என்ன?
MR தடுப்பூசி என்பது, measles(தட்டம்மை) மற்றும் rubella(ருபெல்லா) ஆகிய 2 நோய்களுக்கு பாதுகாப்பு தருகிறது.
இவ்வளவு நாட்களாக MMR(measles, mumps, rubella) எனும் தடுப்பூசி தனியார் மருத்துவர்களிடம் மட்டுமே போடப்பட்டு வந்தது. 1990களில் இருந்து இந்த தடுப்பூசி இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. இப்போது அரசே இலவசமாக measles, rubella நோய்களுக்கு பாதுகாப்பு தரும் இந்த MR தடுப்பூசியை போடவுள்ளது.
ருபெல்லா(rubella) என்றால் என்ன?ருபெல்லா நோயும் அம்மை நோய்களில் ஒருவகை தான். காய்ச்சல், நெறிக்கட்டி, தடுப்பு ஆகிய அறிகுறிகள் ஏற்படும்.
இதென்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கர் நோயா?
ருபெல்லா குழந்தைகளுக்கு வருவது பெரிய பிரச்சனை இல்லை. ஆனால், கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு இந்நோய் தொற்று ஏற்படும் போது, கருவிற்கு நோய்க்கிருமிகள் சென்று கருவை தாக்குகின்றன. இதனால் congenital rubella syndrome எனப்படும் பிறவி குறைபாடு பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும்.
இந்த congenital rubella syndrome நோய் கிட்டத்தட்ட வருடத்திற்கு ஒரு இலட்சம் குழந்தைகளை பாதிக்கிறது.
இதனால், காது கேளாமை, பிறவி கண் புரை(congenital cataract), இருதயத்தில் ஓட்டை(congenital heart defects), மூளை வளர்ச்சி குறைபாடு, கல்லீரல் மற்றும் இரத்தம் சார்ந்த கோளாறுகள் என்று பலப்பல பிரச்சனைகள் பிறக்கும் முதலே இந்த குழந்தைகளுக்கு இருக்கும்.இந்த நோயுடன் ஒரு குழந்தை பிறந்துவிட்டால், இவற்றை சரி செய்ய எந்தவொரு மருந்தோ சிகிச்சையோ கிடையாது.
கர்ப்பிணிகளுக்கு மட்டும் போட வேண்டியது தானே?
இந்த தடுப்பூசியை கர்ப்பிணிகளுக்கு போட இயலாது.குழந்தைகளுக்கு போட்டு, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்தினால் தான் வருங்காலத்தில் வராமல் தடுக்க இயலும்.இந்நோயை முற்றிலும் ஒழிக்க முடியும்.ஏற்கனவே அமெரிக்க கண்டத்தில் முற்றிலும் இந்நோய் பிறக்கும் குழந்தைகளுக்கு வராமல் தடுக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் இன்னும் வருடத்திற்கு, கிட்டத்தட்ட 15000 முதல் 20000 குழந்தைகளுக்கு இந்நோய் வருவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.
http://www.indianpediatrics.net/may2012/may-377-399.htm
ஏன் திடீரென்று இந்த தடுப்பூசி கட்டாயமாக்கப்படுகிறது?
போலியோ சொட்டு மருந்து 40 வருடங்களாக இந்தியாவில் கொடுக்கப்பட்டு வந்தாலும், pulse polio program எனப்படும் கட்டாய போலியோ சொட்டு மருந்து தின திட்டம் 1995 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தான், கொடிய போலியோ நோயின் தாக்கம் குறைந்து 2012 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் போலியோ நோயே இல்லை எனும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதே போல், தட்டம்மை தடுப்பூசி 1985 முதல் போடப்பட்டு வந்தாலும், இன்னும் தட்டம்மை இந்தியாவில் ஒழிந்தபாடில்லை. இப்போது தட்டமையுடன் ருபெல்லா நோயையும் ஒழிக்க வேண்டி இந்திய அரசு பல்ஸ் போலியோ திட்டம் போல கட்டாய MR(தட்டம்மை ருபெல்லா) தடுப்பூசி திட்டத்தை முதல் கட்டமாக தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் அறிமுகப்படுத்தி உள்ளது. இது மாபெரும் முன்னேற்றமாகும். உலகத்தில் ஏற்கனவே 123 நாடுகள் இந்த தடுப்பூசியை கட்டாயமாக்கி உள்ளன. இந்தியா 124 வது நாடு. அவ்வளவே.
இந்த தடுப்பூசியால் என்னென்னமோ பக்க விளைவுகள் எல்லாம் வரும் என்று கூறுகிறார்களே, உண்மையா? ஆட்டிசம் நோயை இந்த தடுப்பூசி ஏற்படுத்துமா?
இவையெல்லாம் வெறும் புரளிகளே.
MMR தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் கடந்த 20 வருடங்களாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கோடிக்கணக்கான ஊசிகள் இதுவரை போடப்பட்டு உள்ளன. இந்த முட்டாள்கள் கூறுவது போல் இந்த ஊசியினால் குழந்தைகளுக்கு வீரியம் குறைந்து போயிருந்தால் இந்நேரம் நாட்டில் உள்ள பாதி குழந்தைகள் மருத்துவமனையில் தான் அட்மிட் ஆகியிருக்கும். கோடி குழந்தைகள் ஆடிசம் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்.
ஆட்டிசம் நோய்க்கும் MMR ஊசிக்கும் தொடர்பு என்று 1998 இல் வெளிவந்த ஒரு பொய்யான ஆராய்ச்சி கட்டுரை தெரிவித்ததினால் வந்த குழப்பங்களே இவை.
http://briandeer.com/mmr/lancet-paper.htm
1998 இல், ஆண்ட்ரூ வேக்பீல்ட் எனும் ஆராய்ச்சியாளர், ஆட்டிசம் நோய் குறைபாடு வந்த 12 குழந்தைகளை மட்டும் வைத்துகொண்டு MMR ஊசிக்கும் ஆட்டிசம் நோய்க்கும் தொடர்பு உண்டு என்று ஒரு பொய்யான ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த ஆராய்ச்சி கட்டுரைக்கு பிறகு Centers for Disease Control and Prevention, the American Academy of Pediatrics, the Institute of Medicine of the US National Academy of Sciences, the UK National Health Service, and the Cochrane Library ஆகிய பல பெரிய ஆராய்ச்சி மற்றும் அரசு மருத்துவ நிறுவனங்கள் இது உண்மையா என்று ஆராய்ந்து இது முற்றிலும் தவறு என்று 20 க்கும் மேற்பட்ட பெரிய பெரிய ஆராய்ச்சிகளில் நிரூபனப்படுத்தி உள்ளன.
http://onlinelibrary.wiley.com/doi/10.1002/14651858.CD004407.pub3/full
http://jamanetwork.com/journals/jama/fullarticle/2275444
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/19952979
http://www.iom.edu/reports/2011/adverse-effects-of-vaccines-evidence-and-causality.aspx
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/18252754
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/18769550
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/17168158
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/17015560
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16865547
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16818529
http://www.ncbi.nlm.nih.gov/m/pubmed/16729252
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/15173555
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/15364187
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/14754936
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/12876158
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/12421889
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/12415036
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/12193358
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/11850369
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/11581466
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/10376617
பிரைன் டீர் எனும் பத்திரிக்கையாளரும் வேக்பீல்ட் செய்த தில்லுமுல்லுகளை கடும் முயற்சிக்கும் ஆராய்ச்சிக்கும் பிறகு உலகிற்கு தெரிவித்தார்.http://briandeer.com/mmr/lancet-summary.htm
ஆட்டிசம் எனப்படுவது பிறப்பிலேயே இருக்கும் ஒரு மூளை செயல்திறன் குறைபாடு நோய். ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு 1 வயதிற்கு முன்னரே (அதாவது இந்த MMR தடுப்பூசி போடப்படும் முன்னரே) இந்த நோயின் அறிகுறிகள் தென்படுகின்றன. அதாவது, குழந்தை எல்லாரையும் பார்த்து சிரிக்காமல் இருப்பது, மழலை மொழி பேசாமல் இருப்பது, டாடா காண்பிக்காமல் இருப்பது, பெயர் சொன்னால் திரும்பாமல் இருப்பது, போன்ற அறிகுறிகள் ஒரு வயதிற்கு முன்னரே ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் இருப்பதை காட்டி கொடுத்து விடும்.
https://www.helpguide.org/articles/autism/autism-symptoms-and-early-signs.htm
தடுப்பூசி போடப்படும் முன்னரே நோயின் அறிகுறிகள் குழந்தைக்கு இருப்பது உண்மை என்றால், அந்த நோய்க்கு எப்படி தடுப்பூசி காரணமாகும்? கொஞ்சம் யோசிங்க பாஸ்.
தடுப்பூசி எதிர்ப்பினால் ஏற்பட்ட இழப்புகள் என்னென்ன?
ஆண்ட்ரூ வேக்பீல்ட் செய்த குழப்பத்தால், anti vaccine movement எனும் தடுப்பூசி எதிர்ப்பு இயக்கங்கள் உலகம் முழுதும் உருவாகி, ஏற்கனவே கட்டுபடுத்தப்பட்ட தட்டம்மை, கக்குவான் இருமல், டிப்தீரியா, டெடனஸ் போன்ற நோய்கள் இப்போது திரும்பவும் தோன்றி பல உயிர்களை காவு வாங்கி வருகின்றன.
இந்த ஒரு ஆசாமி செய்த குழப்பத்தினால் இதுவரை தடுப்பூசி போடாமல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 15 இலட்சம் மேல்.
http://www.cfr.org/interactives/GH_Vaccine_Map/#map
இந்தியாவில் கூட சமீபத்தில் கேரளா மலப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே நன்று கட்டுபடுத்தப்பட்ட டிப்தீரியா நோய்க்கு தடுப்பூசி போடாமல் விட்டதினால், டிப்தீரியா நோய் 300க்கும் மேற்பட்ட குழந்தைகளை தாக்கி பல குழந்தைகள் இறந்தும் போன கொடுமை நிகழ்ந்தது.
எனவே நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
- தட்டம்மை ருபெல்லா தடுப்பூசியை 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் அனைவரும் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும்.
- இது போன்ற அறிவிலிகள் அனுப்பும் முட்டாள்தனமான மெசேஜ்களை பார்வார்டு செய்வதை விட்டுவிட்டு, வேறு ஏதாவது உருப்படியான வேலை இருந்தால் போய் பார்க்க வேண்டும்.
நன்றி.