You are currently viewing பேலியோ உணவுமுறை சாமானிய நடுத்திர வர்க்கத்தினருக்கு சாத்தியமா?

பேலியோ உணவுமுறை சாமானிய நடுத்திர வர்க்கத்தினருக்கு சாத்தியமா?

அனைவருக்கும் வணக்கம்,

பேலியோ உணவுமுறை பலரது வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே.

பல புரட்சிகளை பேலியோ உணவுமுறை ஏற்படுத்தி வந்தாலும், சில மக்கள் பேலியோ பின்பற்ற தடையாக கருதுவது, பேலியோ பின்பற்ற ஆகும் செலவு.

காலம் ரொம்ப மாறிவிட்டது. 
இப்போது, 
துவரம் பருப்பு கிலோ 220 ரூபாய்.
அரிசி கிலோ 55 ரூபாய்.
சுண்டல், பட்டாணி கிலோ 150 ரூபாய்.
ஒப்பிட்டு பார்த்தால், கோழியும் மீனும் கூட அவ்வளவு இல்லை. முட்டை நான்கரை ரூபாய்.

முறையாக இரண்டையும் ஒப்பிட்டு விடலாம் என்று இறங்கினேன்.

(*அனைத்து உணவுகளின் மூலப்பொருட்கள் அளவு என் வீட்டு சமையல் முறையை ஒத்தது. 
*பொருட்களின் விலைகள் ஈரோடு லோக்கல் மார்க்கட் / சூப்பர் மார்க்கட் விலையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது.
*கணக்கிடப்பட்ட முறைகள், முழு விபரங்கள் அறிய கீழே உள்ள படங்களைப் பார்க்கவும்.
*இதில் சமையல் காஸ் மற்றும் மசாலா பொருட்களின் விலைகள் அடங்காது)

சாதாரண மாதிரி உணவு:
காலை : 5 இட்லி, சாம்பார், சட்னி, காபி.
மதியம்: சாதம், சாம்பார், குழம்பு, பொரியல், தயிர்.
சிற்றுண்டி: டீ, பிஸ்கட், போண்டா/பஜ்ஜி.
இரவு: 5 சப்பாத்தி, காய்கறி குழம்பு.

விலை: ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 122 ரூபாய்.

பேலியோ மாதிரி உணவு : (ரெகுலர்)
காலை: பாதாம் 100 / பட்டர் டீ
மதியம்: 2 முட்டை, புடலங்காய் பொரியல்
மாலை: கொய்யா, எலுமிச்சை ஜூஸ்
இரவு: வாரம் ஒரு நாள் மட்டன், 2 நாள் சிக்கன், 1 நாள் மீன், 3 நாள் முட்டை.

விலை: ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 135 ரூபாய்.

பேலியோ மாதிரி உணவு: (இன்னும் விலை குறைக்கப்பட்டது)
காலை: பட்டர் டீ
மதியம்: 2 முட்டை, புடலங்காய் பொரியல்
மாலை: கொய்யா, எலுமிச்சை ஜூஸ்
இரவு: வாரம் 3 நாள் சிக்கன், 1 நாள் மீன், 3 நாள் முட்டை.

விலை: ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 97 ரூபாய்.

இதில், 

அவ்வப்போது, கண்ட கண்ட தீனிகள், இனிப்புகள், ஓட்டல் சாப்பாடு , ஆகியவற்றிற்கு ஆகும் செலவுகள்,

மருத்துவ செலவுகள் – டயபடீஸ், உயர் இரத்த அழுத்தம், ஆகியவற்றிற்கு மாதந்தோறும் மாத்திரைகள்,

மாரடைப்பு, ஆஞ்சியோ, பைபாஸ், முதலிய சிகிச்சைகளுக்கு ஆகும் பெரும் செலவுகள்,

குறைந்த வயதுகளில் மேற்கூறிய நோய்களை வரவழைத்து கொண்டு அல்லல் படுவதால், ஏற்படும் வருமானக் குறைவு,

ஜிம்கள், போலி உடல் எடை குறைப்பு மருந்துகள் போன்ற விஷயங்களுக்கு ஆகும் செலவுகள் ஆகியவற்றை நான் கணக்கில் எடுத்துகொள்ளவில்லை.

எனவே, நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 
எது உண்மையில் செலவு குறைந்தது என்று. 
பேலியோ உணவு சாமானியர்களுக்கு அல்ல என்று சாடுபவர்களுக்கு இந்த பதிவினைக் காட்டவும்.

Dr. A. Arunkumar, MBBS, MD(Pediatrics),
குழந்தை நல மருத்துவர், ஈரோடு.

This Post Has One Comment

  1. Sudalaiyandi

    நீரிழிவால் உடல் எடை குறைந்து வருகிறேன்..‌‌பேலியோவால்எடை கூடுமா?

Leave a Reply